சொற்களை உருவாக்க உதவ வேண்டும். எடுத்துக்காட்டாக , library என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு நூலகம் , நூல்நிலையம் ஆகிய சொற்கள் கையாளப்படுகின்றன. இச்சொற்களில் நூலகம் என்னும் சொல்லே மேலும் பல சொற்களை உருவாக்கும் ஆக்கத்திறன் கொண்டது. library - நூலகம், librarian - நூலகர், library science - நூலக இயல்.
‘தென் ஆப்பிரிக்காவின் பெண்கள் விடுதலை’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதத் தொடங்கிய பாரதி, Member என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லொன்றை உருவாக்க முனைந்தார். மெம்பர் என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் எனக்கு அகப்படவில்லை. இது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். அவயவி சரியான வார்த்தையில்லை.
அங்கத்தான் கட்டிவராது. சபிகன் சரியான பதந்தான். ஆனால் பொதுஜனங்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள் கண்டுபிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு.
அரைமணி நேரம் யோசித்துப் பார்த்தேன்; உறுப்பாளி? ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனதிற்குப் பொருந்தவில்லை. என்ன செய்வேன்!
கடைசியாக மெம்பர் என்று எழுதி விட்டேன். இன்னும் ஆர, அமர யோசித்துச் சரியான பதங்கள் கண்டுபிடித்து மற்றொருமுறை சொல்லுகிறேன். கற்பவை கற்றபின்... மாணவர் ஒவ்வொருவரும் கலைச்சொற்களைப் பொருளுடன் திரட்டி அகராதியாக்குக.
XI Std Tamil மொழியைக் கற்கும் ஒருவர் படித்தல், எழுதுதல், கேட்டல், பேசுதல் என்னும் பல்வேறு திறன்களை உள்ளடக்கியவராக விளங்கவேண்டும். குறிப்பாகப் படித்தல் என்னும் திறனானது வரிவடிவத்தைக் காணுதல், முறையாக ஒலித்தல், பொருள் உணர்தல் ஆகிய மூன்று செயல்களை உள்ளடக்கியதாகும். இவற்றுள் எந்தச் செயலில் குறைவு ஏற்பட்டாலும் படித்தல் என்பது முழுமையடையாது. ஒரு தொடரையோ பத்தியையோ கட்டுரையையோ படிக்கும்போது, பொருள் உணர்வுக்கு ஏற்ப, நிறுத்திப் படிக்க வேண்டிய இடத்தில் நிறுத்தியும் சேர்த்துப் படிக்க வேண்டிய இடத்தில் சேர்த்தும் வியப்பு, அச்சம், வினா முதலிய உணர்வுகள் வெளிப்படும் இடங்களில் அவற்றை வெளிப்படுத்தியும் படிக்க வேண்டியது படிப்பவர்தம் கடமையாகும்.
பேருந்து, தொடர்வண்டி, வானூர்தி போன்றவை நிற்கும் இடத்திற்கு ‘நிறுத்தம்‘ என்பது பெயர். அவற்றைப் போலவே, மக்கள் உணர்வின் இயக்கமாக விளங்கும் மொழியின் இயக்கத்திற்கும் நிறுத்தம் உண்டு. வண்டிகள் சாலை விதிகளுக்கு ஏற்ப இயங்கவும் நிறுத்தவும் விலகவும் ஒதுங்காமல் பின்வரவும் எனக் குறிகள் (விளக்குகள், ஒலிகள்) உள்ளமை போலச் சொற்றொடர் நிறுத்தங்களுக்கும், குறிகள் என்னும் அடையாளங்கள் உண்டு. அவற்றிற்கு ‘நிறுத்தக்குறிகள்’ என்று பெயர்.
எடுத்துக்காட்டாக, “ மறைமலையடிகள் மரணத்தின்பின் மனிதர்நிலை என்னும்நூலை இயற்றினார்“ மறைமலையடிகளார் எழுதிய நூல்களை அறிந்திராத ஒருவர், நிறுத்தக்குறிகள் இடம்பெறாத இத்தொடரைப் படிக்கும்போது மரணத்துக்குப்பின் அவர் எப்படி நூல் எழுத முடியும்? என்று வினவுவார். ஆனால், மறைமலையடிகள் என்னும் பெயருக்குப்பின் காற்புள்ளியும், மரணத்தின்பின் மனிதர்நிலை என்பவற்றின் முன்னும் பின்னும் மேற்கோள்குறியும் இட்டு, மறைமலையடிகள், ‘ மரணத்தின்பின் மனிதர்நிலை ‘ என்னும் நூலை இயற்றினார். என்று எழுதும் போது பொருள் தெளிவாகிவிடும் அல்லவா!
எனவே , நிறுத்தக்குறிகள் ஒரு தொடரில் உள்ள பொருள்வேறுபாட்டை உணர்த்துவதற்கு அடிப்படையாக விளங்குகின்றன என்க. நிறுத்தக்குறிகளைப் பயன்படுத்திப் படிக்க முயலும் போது தெளிவாகப் பொருள் உணர்ந்து, படிப்பவர்களும் கேட்பவர்களும் பயன்பெறுவர். நிறுத்தக்குறிகளை இடாமல் எழுதுவதோ இடம் மாற்றி இக்குறிகளை இடுவதோ தொடரின் பொருளையே மாற்றிவிடும். சிலவேளைகளில் முற்றிலும் பிழையான பொருளைத் தந்துவிடும்.
எனவே , நிறுத்தக்குறிகள் மொழியைத் தெளிவாகப் பேசவும் படிக்கவும் எழுதவும் துணைநிற்கின்றன. இனி, நிறுத்தக்குறிகள் சிலவற்றையும் அவற்றை எவ்வெவ்விடத்தில் பயன்படுத்தப்படவேண்டும் என்பதையும் எடுத்துக்காட்டுகளுடன் காண்போம்.