ஆவணப்படம் (Documentary Film) உலகில் நடக்கும் நிகழ்வுகளை நடந்தது நடந்தவாறே எழுதி அல்லது பதிந்து வைக்கும் உண்மைக் குறிப்பே ஆவணம் ஆகும். திரைப்பட வகைகளில் ஆவணப்படம் என்பதும் ஒன்றாகும். ஒரு நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும் போதே படப்பிடிப்புக் கருவி படம்பிடித்த உண்மைச் சம்பவங்களையே உண்மை ஆவணப்படம் என்று கூறுவர். இதனை “டாக்குமெண்டரி ஃபிலிம்” (Documentary Film) என்று ஆங்கிலத்தில் சுட்டுவர்.
விவரணப்படம், தகவல் படம், செய்திப்படம், சாசனப்படம் என்ற பல பெயர்களால் இதனை அழைப்பர். தமிழின் ஆவணப்பட முன்னோடியான ஏ.கே.செட்டியார் “வாழ்க்கைச் சித்திரப் படம்” என்று இதனைக் குறிப்பிட்டார். இவர் 1940இல் ‘மகாத்மா காந்தி‘ என்னும் ஆவணப்படத்தைத் தயாரித்துப் புதுமையை ஏற்படுத்தியவர். நடைமுறையிலுள்ள உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைப்பதற்குச் சில நேரங்களில் உண்மை நிகழ்வுகள் சிக்குவதில்லை.
அதாவது உண்மையான நிகழ்ச்சி நடந்து முடிந்திருக்கும். அச்சம்பவத்தைச் சிலரை நடிக்க வைத்து நாடகமாக அதை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். அதனால், அதனை நாடக ஆவணப்படம் என்பர். இது “டாக்கு டிராமா” அல்லது “ஃபிக்ஷன் டாக்குமெண்டரி” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும்.
1911ஆம் ஆண்டு டில்லியில் ஐந்தாம் ஜார்ஜின் முடிசூட்டு விழாவை எடுத்த படமே இந்தியாவில் உருவாக்கிய முதல் ஆவணப்படம். இதனை மருதப்பன் என்ற தமிழர் உருவாக்கினார். ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் “கேன்ஸ்” திரைப்பட விழாவில் வழங்கும் “பாம்டி ஆர்” என்ற விருது குறிப்பிடத்தக்கது. அவ்விருதினைப் பெற்ற முதல் ஆவணப்படம் 1956இல் வெளியான “தி சைலன்ட் வேல்டு” என்பதாகும்.