செய்திகளின் தன்மைகள் மக்கள் அறியாத நிகழ்வுகள், அரசின் அறிவிப்புகள், இயற்கைச் சீற்றங்கள், புதிய கண்டுபிடிப்புகள், சாதனைகள், அரசியல், நீதிமன்ற நடவடிக்கைகள், விளையாட்டு, வானிலை, வாணிகம் சார்ந்த நிகழ்வுகள் போன்றவை செய்தியாக்கப்படவேண்டும். செய்திகள் உண்மைத்தன்மை உடையனவாக இருத்தல் அவசியம். தேவையற்ற சொற்கள், கற்பனைகள், சுயகருத்துகள், விமர்சனங்கள் இடம் பெறுதல் கூடாது. நடுநிலையோடு செய்திகள் இருத்தல் வேண்டும்.
எளிய நடையில் மக்களுக்குப் புரியும் சொற்களில் அமைதல் நலம். நெடிய தொடராக இல்லாமல், சிறுசிறு தொடராகச் செய்தியை எழுதுதல் வேண்டும். பிறநாட்டுச் செய்திகளை மொழிபெயர்க்கும் பொழுது பொருள் மாறாமல் மொழிபெயர்த்தல் வேண்டும் என்றார். அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக இருந்தன.
அவருக்கு நன்றி சொல்லி விடைபெற்றோம். அப்பொழுது கடிகாரம் மாலை ஐந்து மணியைக் காட்டியது. நிலையத்தில் கலை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. நிகழ்ச்சியினைத் தொகுப்பாளர் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார்.
நிகழ்ச்சி முடிந்தவுடன் அவரைச் சந்தித்து எங்களது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டோம். ”உங்களால் எப்படி இவ்வளவு அழகாக நிகழ்ச்சியை நடத்த முடிகிறது? ” என்று கேட் டோம். அப்போது அவர் நிகழ்ச்சித் தொகுப்பிலுள்ள உத்திகள் பற்றி எங்களிடம் பகிர்ந்துகொண்டார்.