- ஜெயகாந்தன் பெரியசாமி வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால், அதுவும் அந்த நரைத்துப்போன, சுருட்டுப் புகையால் பழுப்பேறிய பெரிய மீசையை முறுக்கிக் கொண்டு பேச ஆரம்பித்துவிட்டால்..... நிச்சயம் அவர் பேசுகின்ற விஷயம் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த இரண்டு உலக மகா யுத்தங்களிலும் நேச தேச ராணுவத்தினர் புரிந்த வீரதீரச் சாகசங்கள் பற்றியதாகத்தான் இருக்கும். அரும்பு மீசைப் பிராயத்தில் முதல் மகா யுத்தத்திலும், கரு கருவென முறுக்கு மீசை வளர்ந்த நடுத்தர வயதில் இரண்டாவது மகா யுத்தத்திலும் சமராடி வந்தவர் அவர். சுதந்திரமும் அமைதியும் நிலவும் ஒரு நாட்டின் பிரஜையாய் நரைத்த மீசையுடன் தளர்ந்த உடலுடன் இப்போது வாழ்ந்த போதிலும் அவரது பட்டாளத்துக்கார மனத்துக்கு அடிக்கடி பழைய நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்திக் கொள்வதில் ஒரு போதை இருந்தது.
அதில் ஒரு புத்துணர்ச்சியும் பிறந்தது. தன் மகனை ராணுவ வீரனாக்க வேண்டும் என்ற தீர்மானத்தைக் கண்டு பயந்த அவர் மனை வி மரகதம் உறவினர்கள் மூலம் கிழவரின் முடிவை மாற்ற முயன்றாள்..... "எதுக்குங்க பட்டாள மும்....கிட்டாள மும்? பையன் பத்து படிச்சி பாஸ் பண்ணி இருக்கு.
ஏதாவது கெவுருமெண்டு உத்தியோகம் ஒண்ணு பாத்து வெச்சி, கலியாணம் காட்சி நடத்தி பேரன் பேத்தியைக் கொஞ்சிக்கிட்டிருக்காம--- பையனைப் பட்டாளத்துக்கு அனுப்பறது சரியில்லீங்க அவ்வளவுதான்......" என்று கூறிய அந்த உறவினர்களையும், அவர்கள் அவ்விதம் வந்து யோசனை கூறக் காரணமாயிருந்த மனை வியையும் பார்த்து மீசையை முறுக்கிக் கொண்டு லேசாய்ச் சிரித்தார் பெரியசாமி. பிறகு அவர்கள் சொல்வதைச் சற்று ஆழ்ந்து சிந்தித்தார். அதில் பொருளிருப்பதாகத் தோன்றவில்லை அவருக்கு. குறுகிய பாசம் என்பதைத் தவிர வேறு காரணமில்லை என்றே தோன்றியது.
அவர்களுக்கு அவர் சொன்னார்: "உங்களுக்குத் தெரியாது.... ம்.... நான் வாழ்நாள் பூராவும் வெள்ளைக்காரங்ககிட்டே அடிமைச் சிப்பாயாவே காலங் கழிச்சவன்.... அப்பல்லாம் ஒரு சாதாரண வெள்ளைக்கார சோல்ஜருக்கு இருந்த மதிப்புக்கூட ஒரு கறுப்பு மேஜருக்கு கிடையாது, ஒரு சுதந்திர நாட்டு ராணுவத்திலே ஒரு சாதாரண சிப்பாயாக இருக்க மாட்டோமான் னு ஏங்கினது எனக்கில்லே தெரியும்?
இப்ப எம்மகனுக்கு அந்தச் சான்ஸ் கெடைக்கிறதுன்னா அதெ விடலாமா ? பட்டாளத்துக்குப் போனா, சாகறது தான் தலை விதின்னு நெனச்சிக்காதீங்க. பட்டாளத்துக்குப் போகாதவங்களுக்கும் சாவு உண்டு. .
. வாழ்கையிலே ஒரு பொறுப்பு' அநுபவம், தேசம்ங்கிற உணர்வு... ம்... ஒரு 'டிஸிப்ளின்' எல்லாம் உண்டாகும் பட்டாளத்திலே..
இதெல்லாமில்லாம சும்மா வெந்ததைத் தின்னுட்டு வேளை வந்தா சாகறதிலே என்னா பிரயோசனம்?... சொல்லுங்க" என்று அவர் கேட்கும் போது தந்தையின் அருகே நின்றிருந்த சோமநாதன், தந்தையின் இதயத்தையும் எண்ணத்தையும் சரியாகவும் முழுமையாகவும் புரிந்துகொண்டான். "அப்படிச் செத்துப் போனாத்தான் என்னப்பா? பட்டாளத்துக்குப் போறவன், ஊருக்கு லீவில் வந்து உடுப்பைக் காமிச்சுப்பிட்டுப் போனாப் போதுமா?
சண்டைன்னு வந்தா சாகவும் தான் தயாராப் போகணும்" சோமநாதன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு, கிழவரின் சுருட்டுக் கறையேறிய கரிய உதடுகள் உணர்ச்சி மிகுந்து துடித்தன. 11th Advance Tamil - - - :