படிப்போம் சுவைப்போம் குறும்புதினங்கள் சிறுகதையின் போக்கிலிருந்து சற்று மாறுபட்டவை. இதன் கதைப்பின்னல் நீண்ட வரலாறு போல் அமையாமல் சிறுகதை போல் அமைந்திருக்கும். இவ்வகைப் புதினங்கள், புதினங்களாகவும் இல்லாமல் சிறுகதைகள் போலவும் இல்லாமல் அமையும் ஒருவகை புனைகதை இலக்கியம் என பிரெஞ்சு திறனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். புதினத்திலிருந்து அளவால் சுருங்கியதாக இருந்தாலும் இது புதினத்தின் ஒரு பிரிவாகும்.
புதின இலக்கியங்களிலிருந்து குறும்புதினங்கள் வேறுபடுவதற்கு அடிப்படைக் காரணமாகக் கதைக்கரு வெளிப்படுத்தும் முறை அமைகின்றது. கதை, நிகழ்ச்சியை நோக்கி அமைந்தால் அதனைக் குறும்புதினம் என்றும், நிகழ்ச்சிக்கு அப்பால் கதைக்கரு அமைந்தால் அதனைப் புதினம் என்றும் கூறலாம். எனவே, சிறுகதையிலிருந்து மாற்றம் பெற்ற புனைகதை வடிவமே குறும்புதின இலக்கியம்.