நிகழ்விடமும் காலமும் புதினக்கலை நடந்துமுடிந்த அல்லது நடந்துகொண்டிருக்கிற வாழ்வியல் நிகழ்வுகளை எழுத்தில் நிகழ்த்திக் காட்டுகிறது. அதற்காகப் புனைகதை ஆசிரியர்கள் கதைக்களம் ஒன்றையும் நிகழும் காலச்சூழலையும் உருவாக்கித் தருகிறார்கள். தனது எழுத்து முறை மூலம் நிகழ்விடங்களின் நம்பகத்தன்மையையும். காலச்சூழலின் உண்மைத்தன்மையையும் உருவாக்கும்போது புனைகதை சிறப்படைகிறது.
ஒருவரது புனைகதை குறிப்பிட்ட கால எல்லைக்கு உட்பட்டது என்றாலும், வாசக மனத்தில் காலம் முன்னும் பின்னுமாக நகர்ந்து எல்லைகளைக் கடந்து விரியுமானால் அது படைப்புக்குக் கலைத்தன்மையை வழங்கிவிடும். இக்கூறுகளின் ஓர்மையைக் கற்றுத்தேறிய ஒருவரே சிறந்த புனைகதைகளை உருவாக்க முடியும். தமிழில் சிறந்த புனைகதைகளை எழுதிய எழுத்தாளர்கள் முறைப்படி இவற்றைக் கல்விப்புலத்தின் வழியாகப் படித்துத் தேர்ந்தவர்கள் இல்லை என்றாலும் தங்கள் முன் னோடிகளையும் பிறமொழி எழுத்தாளர்களையும் வாசித்து உள்வாங்கியதின் வழியாகவே புனைகதை இலக்கியத்தில் சிறந்தவர்களாக விளங்குகின்றனர்.