திறனாய்வு வகைகள் மனத்தாலும் அறிவாலும் அறியப்படும் ஒரு பொருளை, அழகுற உணர்த்தும் படைப்பாக்கம் அல்லது கலைத்திறன் என்பது இலக்கியம் எனப்படுகிறது. இது நோக்கம், தேவை முதலியவற்றின் கருவியாக உள்ளது. இத்தகைய இலக்கியம் தன்னகத்தே பல பண்புகளையும், பல வழிமுறைகளையும், பல கருத்துநிலைகளையும் கொண்டிருக்கிறது. அவற்றை ஆராயவும் விளக்கவும் திறனாய்வு உருவாகிறது.
இத்திறனாய்வு பல அணுகுமுறைகளையும் வகைகளையும் கொண்டுள்ளது. இவற்றைக் கண்டறிவது, திறனாய்வின் ஆழமான பண்புகளையும் பரந்துபட்ட நெறிகளையும் அறிவதற்குத் துணை செய்யும். ஏனெனில், திறனாய்வு என்பது, ஒற்றைப் போக்குக் கொண்டதன்று; பன்முகமான பண்புகளும் வழிமுறைகளும் கொண்டது. எனவே, திறனாய்வின் வகைகளை இங்கு அறிவது மிகவும் தேவையாகிறது.
திறனாய்வு செய்வதற்குரிய வழிமுறை களின் அடிப்படையில், திறனாய்வு வகைகள் அமைகின்றன. பல இலக்கியங்களிலிருந்து அவற்றின் இன்றியமையாத பண்புகள் சிலவற்றை மட்டும் அடையாளங்காட்டுவது, ஒருவகை. குறிப்பிட்ட ஒரு கொள்கை அல்லது பண்புநிலையை அளவுகோலாகக் கொண்டு, அதனைப் பல இலக்கியங்களோடு பொருத்திப் பார்ப்பது, இன் னொருவகை. அதாவது, திறனாய்வு செய்வதற்குரிய வழிமுறை அல்லது செய்முறையைப் பேசுவது, திறனாய்வின் வகை என்று அறியப்படுகிறது.
திறனாய்வு வகைகள் பல வாக இருந்தாலும், அவற்றுள் மிக அடிப்படையானவை எனப் பேராசிரியர் தி. சு. நடராசன் தமது, ‘திறனாய்வுக் கலை‘என்னும் நூலில் குறிப்பிடுகிறார். அவை, பின்வருமாறு: .
பாராட்டுமுறைத் திறனாய்வு . முடிபுமுறைத் திறனாய்வு . விதிமுறைத் திறனாய்வு . செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு .
விளக்கமுறைத் திறனாய்வு . மதிப்பீட்டுமுறைத் திறனாய்வு . ஒப்பீட்டுமுறைத் திறனாய்வு . பகுப்புமுறைத் திறனாய்வு