மாதிரி – திரைக்கதை (பாலுமகேந்திராவின் ‘கதை நேரம் கதைகள்‘ என்ற நூலிலிருந்து ஒரு காட்சி மாதிரி திரைக்கதையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சு.சமுத்திரம் எழுதிய உடன்பிறவா உறவுகள் என்ற கதையை பாலுமகேந்திரா, காத்திருப்பு என்னும் தலைப்பில் திரைக்கதையாக எழுதினார்) காட்சி – அஞ்சலையின் வீடு பகல் / EXT (ஓலை வேய்ந்த குடிசை வீட்டு முன்னால், கதவை ஒட்டிய சுவரோடு அஞ்சலை சாய்ந்து உட்கார்ந்திருக்கிறாள். ஒரு கிழிந்த கம்பளியைப் போர்த்திருக்கிறாள். மிகவும் தளர்வுற்றுக் காணப்படுகிறாள்.
அவளுக்கு முன்னால் முத்துப்பேச்சி (சுமார் பத்து வயது) கையில் ஒரு புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டு, அம்மா சொல்வதை கடிதமாக எழுதுவதற்காக அவள் முகத்தை பார்த்தபடி அமர்ந்திருக்கிறாள். அஞ்சலைக்குப் பின்னால் ஒரு நாய் சலனமுமற்று தூங்கிக் கொண்டிருக்கிறது) அஞ்சலை : (பல ஹீனமான குரலில்) எழுதிட்டியா? மகள் : ம்... அஞ்சலை: படி...
மகள் : அன்புள்ள அப்பாவுக்கு ... மகள், முத்துப்பேச்சி எழுதிக்கொள்வது ... அஞ்சலை: ம்... (சுவரோடு சாய்ந்து கொஞ்சம் சௌகரியமாக அமர முயல்கிறாள்) நாஞ் சொல்றத கவனமாக் கேட்டுக்க...
அத நீ எழுதிற மாதிரி அப்டியே எழுது. (மகள், அம்மா சொல்வதை கேட்டு ஆமோதித்துத் தலையாட்டுகிறாள்) அஞ்சலை : (தளர்ந்த குரலில்) வர, வர எனக்கு ஒடம்பு ரொம்ப மோசமாயிட்டே போகுது.. தெனம் ஆஸ்பத்திரிக்கு போய் வந்துக்கிட்டிருக்கேன்... ஒவ்வொரு நாளும் ரெண்டு, ரெண்டு ஊசி போடுறாங்க...
பத்தாததுக்கு இவ்வளவு மருந்து மாத்திரை வேற... எல்லாம் சாப்பிட்டு என்ன பிரயோஜனம்? வியாதி குணமான மாதிரி இல்ல... ஜாஸ்தியாயிட்டே போகுது ...
(அஞ்சலை சொல்லச் சொல்ல மகள், அதைக் கேட்டு எழுதுகிறாள்) இப்ப ரெண்டு நாளா என்ன சாப்பிட்டாலும் வாந்தி... என்னால எந்திருச்சு நிக்கக்கூட முடியல... நீங்க மாசா மாசம் அனுப்புற பணம் சாப்பாட்டு செலவுக்குத்தான் சரியா இருக்கு... இந்த ஆஸ்பித்திரி செலவுக்கு...
மருந்து மாத்திரை வாங்கிறதுக்கு இதுக்கெல்லாம் அக்கம் பக்கத்தில கடன வாங்கித்தான் சமாளிச்சிட்டிருக்கேன்... (பேசவும் முடியாதவளாய், உட்காரவும் முடியாதவளாய் அவஸ்தைப்படுகிறாள்) 12th Std - Advance Tamil - Chaper - - :