உள்ளடக்கமும் வடிவமும் ஒரு புதினத்தின் உள்ளடக்கம் எத்தளத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். வாழ்வியல் பிரச்சினைகளை ஆராயும் களங்களாக, இன வரைவியல் பதிவுகளாக, தத்துவ தரிசனங்களாக, இலக்கிய மறு உருவாக்கங்களாக, வரலாற்றுப் பதிவுகளின் படைப்பாக்கங்களாக அமையலாம். பொதுவாகப் புதினத்தின் உள்ளடக்கங்கள் அறம் பேசுதல், உழைப்பைப் பேசுதல், உளவியலைப் பேசுதல், வட்டாரம் பேசுதல், இடப்பெயர்வு பேசுதல், உறவு சிக்கல் முரண்களைப் பேசுதல் என அமைகின்றன. ஒரு புதினத்தின் உள்ளடக்கத்தை வலிமையாய் வெளிப்படுத்துவதில் அதன் வடிவத்தின் பங்கு மிகவும் இன்றியமையாதது.
வடிவம் என்பது சொல்லப்படும் முறையின் ஒழுங்கும் ஒழுங்கின்மையும் எனச் சொல்லலாம். புதினம் வாழ்வின் ஒரு துளியை ஒரு புள்ளியை ஒரு தரப்பை மட்டும் சொல்லவந்த வடிவம் அன்று. அது, அதன் கருவைச் சார்ந்த அனைத்தையும் வாசகர்கள் முன் தEொகுத்து முன்வைக்க முனைகிறது. அதன்மூலம் வாசகர்கள் அனைத்தையும் தமக்குள் கண்டு ஆராய்ந்து, தம் நோக்கை உருவாக்கிக் கொள்ள வழிவகுக்கிறது.