ஆ. இடையில் பிரித்துச் சொல்லும் முறை கதையைச் சொல்லிச் செல்லும்போது, அதன் ஒரு புள்ளியில் உட்சென்று மற்றொரு துணைநிகழ்வைச் சொல்லி, மீண்டும் கதைக்கு வருவது. (எ.கா.) கந்தர்வன் எழுதிய ’சாசனம்’ கதையிலிருந்து …. 'சிமிண்டுத் திண்ணையில் பகல் பூராவும் அப்பா உட்கார்ந்திருப்பார்.
எப்போதாவது பர்மாக் குடையை விரித்து நடப்பார். ஒரு நாளைக்கு இத்தனை தடவை என்று எண்ணிவிடலாம் இறங்கி நடப்பதை. அப்பா நடந்திருக்க வேண்டிய நடையெல்லாம் தாத்தா நடந்திருந்தார். சமஸ்தானத்தில் தாத்தா இந்தப் பிரதேசத்தின் பேஷ்கார்.
மஹாராஜா இந்தப் பக்கமாய் ஒரு முறை திக்விஜயம் செய்தபோது தாத்தா ஒவ்வொரு வேளை விருந்தையும் ஒரு உற்சவமாய் நடத்தியிருக்கிறார். மஹாராஜாவின் நாக்கு அது வரை அறிந்திராத ருசியும் பண்டமும் விருந்துகளில்…. மரியாதை காட்டி வெகுவாய்ப் பின்னால் வந்து கொண்டிருந்த தாத்தாவை அழைத்து விரலை அவ்வப்போது நீட்டிக் கொண்டே வந்தார் மஹாராஜா. பின்னால் அந்த நிலங்களெல்லாம் தாத்தாவுக்குச் சமானமாய் வந்தன.’ அப்பாவைப் பற்றி சொல்லப்படும் கதையில் ஒரு புள்ளியில் உள்ளே நுழைந்து தாத்தா குறித்த நிகழ்வுகள் சொல்லப்படுவதை இம்முறைக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.