- இளங்கோ கிருஷ்ணன் அவன் பாணன். செவியே மனமாய் வாழ்ந்து கொண்டிருப்பவன். ஒலியின் உதடுகள் பேசும் மர்ம மொழியின் வசீகரத்தில் புத்திசொக்கித் திரிபவன். திசையெங்கும் ஒரு வானம்பாடியாய்ச் சுற்றி அலைபவன்.
அலைதலின் வெம்மையில் நாவறள , அவள் வீட்டு வாசலில் போய் நின்றான். தாயே தாகமாய் உள்ளது சிறிது நீர் கொடுங்கள் என்றவன், அவள் உள்ளே செல்லும் போதுதான் அந்த வினோதத்தைக் கவனித்தான். திரும்பி வந்தவளிடம் "இரண்டு கால்களையும் நன்றாகவூன்றித்தானே நடக்கிறீர்கள்?" என்று கேட்டான். பிறகு, அவளின் காற்சிலம்புகளை வாங்கிக் காதருகே கொண்டுபோய் ஆட்டியாட்டிச் சோதித்தான்.
அவன் செய்கையின் காரணம் புரியாதவள் அவை மா ணிக்கப் பரல்களால் ஆனவை என்றாள். அறிவேன் தாயே. இவை மாணிக்க அரிகள் என ஜதி சொல்கிறது. ஆனால், இரண்டிற்கும் ஓசை வேறுபடுகிறது.
இரண்டிலுமுள்ள பரல்களில் ஒன்றே ஒன்று மட்டும் ஓசை எழுப்புவதே இல்லை என்று ஆச்சர்யப்பட்டவன் அதை அவளிடமே திருப்பித் தர, கைநழுவியது. அது தரையில் மோதியபோது அந்த நகரம் ஒருமுறை நடுங்கியது.