📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 148grammar_exercise

நன்னூல்

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

நன்னூல் தொல்காப்பியத்திற்கு அடுத்ததாக மிகுதியாகப் பயன்பாட்டிலிருக்கும் இலக்கண நூல், நன்னூல். தொல்காப்பியம், தெளிவும் எளிமையும் கொண்டு விளங்க, நன்னூல் செறிவும் சுருக்கமும் கொண்டு விளங்குகிறது. நன்னூலில் எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும் உள்ளன. இந்நூலுள் அமைந்துள்ள பொதுப் பாயிரம் (முகவுரை) நல்ல நூலுக்குரிய இலக்கணம், பத்து அழகு, பத்துக்குற்றம், நல்லாசிரியர், ஆசிரியர் ஆகாதவர் ஆகியோரது இலக்கணம், நல்ல மாணாக்கர், மாணாக்கர் ஆகாதவரின் இயல்புகள், பாடங்கற்பிக்கும் முறை, கற்கும் முறை ஆகியன குறித்து விரிவாகக் கூறியுள்ளது.

தொல்காப்பியத்தின் பாயிர உரை மேற்கோள்கள், இந்நூலில் இலக்கணச் சூத்திரங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. நன்னூலின் எழுத்ததிகாரத்திலுள்ள பதவியல், தொல்காப்பியத்தின் வளர்நிலையாக அமைந்துள்ளது. இவ்வியல், சொற்களின் கட்டமைப்பைத் தெளிவாக விளக்குகிறது; பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் எனச் சொற்களைப் பகுத்து விளக்குகிறது. இந்நூலின் சொல்லதிகாரத்தில் இறுதியாக இடம்பெற்றுள்ள, ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே‘ என்னும் நூற்பா, வழக்கிழந்த இலக்கணக் கருத்துகளை நீக்குவதும் புதிய வழக்குகள் சிலவற்றை ஏற்றுக் கொள்வதும் தவறல்ல ; காலந்தோறும் ஏற்படும் மாற்றத்திற்குட்பட்டதே இலக்கணம் எனக்கூறி அமைகிறது.

இந்நூலுக்கு மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர், சிவஞான முனிவர், ஆறுமுக நாவலர் முதலானோர் உரை கண்டுள்ளனர்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →