📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 215definition

யாரையும் மதித்து வாழ்

Chapter 2: Front Matter · Tamil

யாரையும் மதித்து வாழ் XI Std Tamil செய்தியை உரியவருக்குத் தெரிவிப்பதற்காக எழுதி அனுப்பப்படுவது கடிதமாகும். அதுவே, உரிய வடிவுடன் பHொருட்செறிவாலும் கற்பனை நயத்தாலும் மொழிவளத்தாலும் கடித இலக்கியமாக உருப்பெறுகின்றது. உரைநடையில் மட்டுமன்றிக் காப்பியங்களிலும் சிற்றிலக்கியங்களிலும்கூடக் கடித இலக்கியம் காணப்படுவது அதன் காலத்தொன்மையை விளக்கும். கவித்துவ இயல்பு கொண்ட தாகூரின் கடிதங்கள் கற்பனை, நகைச்சுவை, ஆழ்ந்த சிந்தனை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன.

சிதறிய கடிதங்கள் சிலாயிதக், ஆகஸ்ட் ஆறு ஒரேயடியாகக் கரை தளும்ப நிரம்பி இருக்கிறது. எதிர்க் கரையே தென்படவில்லை. ஓரோரிடத்தில் சுழல்களாகப் பொங்குகிறது. மீண்டும் ஓரோரிடத்தில் துள்ளி எழும் வெள்ளத்தைத் தன் இருகரங்களாலும் அடக்கி, அமுக்கிச் சமமாகப் பரவ ச் செய்தவாறு ஓடுகிறது.

இறந்துபோன ஒரு சின்னஞ்சிறு பறவை, ஆற்றுவெள்ளத்தில் மிதந்து வருவதை இன்று கண்டேன். அதனுடைய சாவின் வரலாறு மிகவும் நன்றாகப் புரிந்துவிட்டது. எங்கேயோ ஓர் ஊரின் எல்லையில் ஒரு தோப்பின் மாமரக் கிளையில் அதன் கூடு இருந்தது. இருட்டும் வேளையில் அது அதன் கூட்டுக்குத் திரும்பித் தன் துணையுடன் மிருதுவான சிறகின் வெம்மையில் தானும் தன் சிறகுகளை விரித்துக்கொண்டு உடல் சோர்ந்து உறங்கியது.

திடீரென்று இரவில் ‘பத்மா’ ( கிழக்கு வங்காளத்தின் பெரிய நதி) சற்று ஒருபுறமாகப் புரண்டாள். அவ்வளவுதான்! மரத்தின் கீழிருந்த மண் சரிந்து விழுந்தது. கூட்டை விட்டுச் சிதறிவிழுந்த பறவை ஒருகணம் கண் விழித்தது.

அதன் பிறகு கண் விழிக்க வேண்டிய அவசியமே அதற்கு இராமல் போய்விட்டது. நாட்டுப்புறங்களில் இருக்கும்போது, எல்லாவற்றையும் விழுங்கவல்ல இந்த மாபெரும் இயற்கையே சிறந்து விளங்குகிறது. பட்டண த்திலோ, மனித சமுதாயம்தான் மிகவும் முக்கியமானதாகத் தலைதூக்கி நிற்கிறது. அங்கே மனிதனுடைய கொடூரமான தன்மை வெளிப்படுகிறது.

தன் சுகதுக்கத்திற்கு முன் மற்ற உயிர்களின் சுகதுக்கங்களைப் பற்றி மனிதன் எண்ணுவதுகூட இல்லை. ஐரோப்பாவிலும் மனிதனுக்குத்தான் முக்கியமான இடம். அவனுடைய வழியோ மிகச் சிக்கலானது. அவர்கள் மற்ற பிராணிகளைச் சாதாரணமான உயிர்களென்றே நினைத்து விடுகிறார்கள்.

பாரத நாட்டினர், மனிதன் விலங்காக மாறுவதையோ, விலங்கு மனிதனாக மாறுவதையோ பற்றி எதுவும் தவறுதலாக எண்ணுவது இல்லை. அதனால்தான் நமது சாத்திரங்கள் எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டுவதை, நடக்கமுடியாத ஓர் அதிசயம் என்று விட்டுவிடவில்லை. நாட்டுப்புறங்களில் இயற்கையோடு ஒன்றி உடனுக்குடன் இணைந்து பழகும்போது என் உள்ளத்தினுள் பாரத நாட்டின் இயல்பு தலைதூக்குகிறது. ஒரு பறவையின் சின்னஞ்சிறு இதயத்தினுள்ளும் வாழ்க்கையின் களிப்பு எத்துணை அதிகமாக இருக்கும் என்பது பற்றிச் சிந்திக்காமல் இருக்க என்னால் முடிவதில்லை.

(சிதறிய பக்கங்கள். ஆம் கடிதம்)

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →