இலக்கண நூல்களின் தோற்றம் இலக்கியங்களின் எண்ணிக்கை பெருகத் தொடங்கியபோது, மொழியின் பொதுத்தன்மைகளைத் தொகுத்துப் பிறருக்கு உணர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இலக்கண நூல் எழுத விழைந்தவர்கள், தாம் வாழ்ந்த காலத்திலும் அதற்கு முன்பும் உள்ள மொழி வழக்கு அனைத்தையும் அறிந்து, வகைப்படுத்திக்கூற முயற்சி மேற்கொண்டனர். இஃது, இலக்கணத் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது. தொல்காப்பியப் பாயிரத்தில், முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி எனக் கூறப்ப ட்டுள்ளமையும் நூலினுள் என்ப, என்மனார் புலவர், மொழிப, மொழிமனார் எனக் குறிப்பிட்டுள்ளமையும் தொல்காப்பியத்திற்குமுன் இலக்கண நூல்கள் இருந்தன என்பதை உறுதி செய்கின்றன.
எனவே, பல நூல்கள் எழுதப்பட்ட பின்னர், நூல்களின் பண்பு நுவலும் இலக்கணங்களும் எழுதப்பட்டன. இலக்கணத் தோற்றம், இலக்கியத்தை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், வழக்குமொழியின் வாழ்வையும் வளத்தையும் போற்றுவதாகவும் அமைந்தது. இதனால்தான், தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம், ‘வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடித் தொல்காப்பியம் தொகுக்கப் பெற்றது‘ என எடுத்துரைக்கின்றது. இலக்கியங்கள் தோன்றிய பின்பே இலக்கணங்கள் தோன்றுகின்றன என்பதனை உணர்த்தும்வகையில், எள்ளினின் றெண்ணெய் எடுபடுவது போல இலக்கியத் தினின்றும் எடுபடுவது இலக்கணம் என்னும் பழைய வழக்குத்தொடரும் உள்ளது.