என்.எஸ். கிருஷ்ணன் திரைப்படத்தில் நகைச்சுவை குறித்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் பேச்சு கலைத்துறையின் முக்கியத்துவத்தைக் கூ று கி ற து .
நகைச்சுவை கலந்து உயர்ந்த கருத்தைக் கூறும் திறத்தினைக் கலைவாணர் உரை வெளிப்படுத்துகிறது. “ தற்போது சில படங்களில் வரும் வில்லன்களைப் பார்த்தால்கூட எனக்குக் கோபம் வருவதில்லை. காமெடியன்களைப் பார்த்தால் அவ்வளவு கோபம் வருகிறது. தலையை மொட்டை அடித்துக் கொண்டு, வந்து நின்று தாறுமாறாகத் தாளத்தைக் காலுக்குள் போட்டு மிதித்து ஆடுகிறார்கள்.
பயங்கரமாக மீசை வைத்துக் கொண்டு குழந்தைகளைப் பயங்காட்டுகிறார்கள். வாழைப் பழத்தோலில் கால் வைத்து வழுக்கி விழுகிறா ர்கள். அத்துடனாவது விடுகிறார்களா? இல்லை.
விழுமுன் அழுகிறார்கள். அழுது முடிக்குமுன் சிரிக்கிறார்கள். வட்ட மேஜை மாநாட்டுக்கு மகாத்மா காந்தி போயிருக்கும் போது, “இந்த வெறும் வேஷ்டியுடன், இப்படியேவா, மன்னரைப் பார்க்கப் போகிறீர்கள்? நல்ல ஆடைகள் அணிந்து கொள்ள வேண்டாவா?”என்று அங்குள்ள ஒருவர் கேட்டாராம்.
அதற்கு அவர் என்ன சொன்னார்? சிரித்துக்கொண்டே,” நான் என்ன செய்வேன்? எனக்குள்ளதையெல்லாம் சேர்த்துத்தான், உங்கள் மன்னர் அணிந்திருக்கிறாரே” என்று கேட்டுவிட்டாராம். கேள்வி கேட்டவருக்கு நாணமாகி விட்டதாம்!
காந்தியின் ஒரே பதிலில், மன்னரின் ஆதிக்கமும் காந்தியின் நகைச்சுவையும் நல்லறிவும் எவ்வளவு தெளிவாகத் தெரிகிறது பார்த்தீர்களா? இந்த நூற்றாண்டுக்கு, குறிப்பாக இந்த வருஷங்களுக்கு, இத்தகைய நகைச்சுவைகள்தாம் தேவை! காமெடியனின் பொறுப்பு சாதாரணமானதல்ல! இவன் உலகின் தாய்!
உலகம் அவன் குழந்தை! குழந்தையின் மகிழ்விற்காகத் தாய் போடும் ஆட்டத்தில் எவ்வளவு அன்பும் அர்த்த புஷ்டியான அறிவும் இருக்க வேண்டுமோ, அவ்வளவும் காமெடியனின் செயல்களில் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை, இலட்சியம்! “என்று பேசுகிறார். கலைத்துறைகள் சமூகப் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்.
ஆன்மீகப் பொழிவாக இருப்பினும் நகைச்சுவைப் பொழிவாக இருப்பினும் அரசியல் பொழிவாக இருப்பினும் சொல்லவரும் கருத்தை மக்கள் மனத்தில் ஆழமாகப் பதிவு செய்தல் பேச்சுக்கலையின் இன்றியமையாத் தன்மையாகும்.