செவ்வியல் இலக்கியங்கள் பழைமையும் இலக்கிய இலக்கணப் பாரம்பரியமும் உள்ள மொழிகளே செவ்வியல் மொழிகள். செவ்வியல் இலக்கியங்களைப் பெற்றிருக்கும் பழைமையான மொழிகளைச் செவ்வியல் மொழிகள் என்று கூறலாம். ஒருமொழி நிலைத்து நிற்பதற்கு அதன் பழைமையும் வளமையும் மட்டும் போதாது. அம் மொழி பேச்சு மொழியாக, எழுத்து மொழியாக, ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக, பயிற்று மொழியாக நிலை பெற்றிடல் வேண்டும்.
இலக்கிய வளம், இலக்கண அரண், மிகுந்த சொல்வளம், வரலாற்றுப் பின்னணி, தனித்தியங்கும் மாண்பு, காலத்திற்கேற்ற புதுமை எனப் பல வகைகளிலும் சிறப்புப் பெற்றிருத்தல் வேண்டும். தமிழுக்கு இவை அனைத்தும் பொருந்தும். எழுத்து உருவான பின்னரே ஒரு மொழி முழுமை அடைகிறது. அதன் பின்னரே அது வளர்ந்து செழுமையுற்றுச் செவ்வியல் இலக்கியங்களைப் படைக்கும் திறன் பெறுகிறது.
செவ்வியல் இலக்கியங்களைப் படைக்க இன்றியமையாதது, எழுத்து வடிவமே. அவற்றோடு அரசியல், பொருளாதாரம், வணிகம், தEொழில், கலை, பண்பாடு ஆகிய பல துறைகளிலும் உயர் வளர்ச்சியை எட்டிய சமூகத்திலிருந்துதான் செவ்வியல் இலக்கியங்கள் தEோன்றுகின்றன என்பது சான்றோர் கூற்று. தமிழ், சீனம், சமஸ்கிருதம், இலத்தீன், ஹீப்ரு, கிரேக்கம் போன்ற செவ்வியல் மொழிகள் அனைத்தும் எழுத்து வடிவத்தைப் பெற்ற பின்னரே செவ்வியல் இலக்கியங்களை உருவாக்கின.